Friday, November 5, 2010

எனது வலைதளத்திற்கு நான் இந்த பெயர் வைத்ததிற்கு காரணம் என்னை வளர்த்த என் தந்தை வழி மற்றும் தாய் வழி பாட்டிகள் இருவர் பெயரும் கருப்பாயி தான். எனக்கு கிடைத்த பாசத்தின் கிட்டத்தட்ட தொண்ணூறு விழுக்காடு அவர்களின் உணர்த்துதல்தான். நினைவு தெரியும் வரைக்கும் என் அம்மாயி. பிறகு எட்டாம் வகுப்பு முடிக்கும் வரையிலும் பெரியம்மா என்று அழைக்கப்பட்ட என் தந்தை வழி பாட்டி - என் அப்பத்தா. என்னை உலுக்கி போட்ட மரணகளும் இவர்களின் மரணங்கள் தான். விடுதியில் இருந்து நான் வீடு வரும் நாள் தான் இவர்கள் இருவருக்கும் திருநாள். "ஏன்டா கண்ணு, நேத்தே நீ வருவயின்னு நானு தடத்த தடத்த பாத்துக்கிட்டு இருந்தேன். ஏன் இன்னக்கித்தான் பள்ளிக்கூடம் ரீவு வுட்டான்களா? "என்று என் பாட்டி அன்று கேட்ட வார்த்தைகளின் அர்த்தமும்,அதில் பொதிந்து இருந்த ஏக்கமும் இப்போது மெல்லப் புரிகையில், உள்ளம் வேதனையில் வலிக்கிறது. அந்த எண்பத்து ஆறு வயது ஜீவனை, அதன் ஏக்கங்களை மனதுள் முழுவதும் புரிந்து கொள்ள முடிய வில்லை என்ற வலி எனக்கும் இப்போதும் இருக்கிறது. நான் உலகை உற்று பார்க்க தொடங்கிய போது, என் தாயாய், தந்தையாய் , பாட்டியாய், பாட்டனாய் இருந்த என் பெரியம்மா- அப்பத்தா. எனக்கு உடம்பு சரி இல்லை என்றால் விடிய விடிய என்னருகில் உட்கார்ந்து கொண்டு கை வைத்தியம் செய்து கொண்டே இருப்பார்கள். எனக்கு எப்போது விழிப்பு வந்தாலும் அவர்கள் என் அருகில் அமர்ந்திருப்பதை பார்க்க முடியும். அவர்களின் உலகமே நானாகத்தான் இருந்திருக்க முடியும்.

அவர்களின் மரணம் ஆகஸ்டு இருபத்து ஐந்து, ௧௯௯௫.

என் அம்மாயி -தன்னுடைய வாழ் நாளின் இறுதி ஆண்டுகளில் கிட்டத்தட்ட என் குழந்தையாகவே மாறிப்போனார்கள். தன்னுடைய தகப்பன் இருக்கையில், தாயை கண்டு பயப்படாத குழந்தை போல, நான் இருக்கையில், என் அம்மாயி, யார் பேச்சையும் கேட்க மாட்டார்கள். அதனாலேயே, எங்கள் வீட்டில் அனைவருக்கும் என் மேல் ஏகக்கடுப்பு. "எல்லாம் இவன் குடுக்கற எடம்; ரொம்ப செல்லம் கொடுக்குறான்; சொன்ன சொல்லுல ஒரு சொல்லு கேக்க மாட்டிங்குது " என்று என்னை எல்லோருமே திட்டுவார்கள். வீட்டில் சமையல் முதல்அனைத்துமே என் அம்மாயியின் விருப்பப்படி தான் நடக்க வேண்டும் என்பது என் கட்டளை. இருக்கட்டுமே, என் இரண்டு வயது மகள் கேட்பதை எல்லாம் செய்கிறோமா இல்லையா? அவர்களும் குழந்தை மாதிரி தானே...என்பது என் எண்ணம். ஆனால், வீட்டில் அனைவருக்கும், "பெரிசு ரொம்ப படுத்துது" என்கிற எண்ணம்.

என்னை யாரவது உற்று பார்த்து விட்டாலே போதும். என் அம்மாயிக்கு கேட்ட கோபம் வந்து விடும். உடனே திருஷ்டி சுற்றி போடுவார்கள். மூன்று வீதி மண்,மூன்று வீட்டு கூரை, மிளகாய், எலுமிச்சம்பழம், எரியும் திரி..எல்லாம் எடுத்து வந்து....."கண்ணா முழி....சின்ன முழி...பெரியமுழி...வரடி கண்ணு...ரிஷி கண்ணு..கொல்லிக்கண்ணு...பாம்பு கண்ணு ...நாய் கண்ணு ...நரி கண்ணு ....." என்று எல்லாக் கண்களையும் திட்டி...திருஷ்டி சுற்றி போட்டால் தான் அவர்களுக்கு நிம்மதி....கொஞ்சம் மங்கலான நிறத்தில் சட்டை போட்டு இருந்தால் கூட, "கொஞ்சம் நல்ல திடமான நிறத்துல சட்டை தைக்க மாட்டாய? " என்று கேட்பார்கள்.எப்போதும், நான் நன்றாக தலை சீவி....நல்ல சட்டை போட்டு கொண்டு இருக்க வேண்டும் அவர்களுக்கு.

என்னை... பார்த்து...பார்த்து...வளர்த்ததில் இவர்கள் இருவர் பங்கும்... என் பெற்றோர்களை விட முக்கியமானது.

இவர்கள் இருவருமே, ஐம்பது ஆண்டுகளுக்கு மேலாக விதவையாய் வாழ்ந்தவர்கள்......இவர்கள் இருவருமே...உழைத்து..உழைத்து...குடுமபத்தை வாழ வைத்து விட்டு...அவர்கள் உழைப்பிற்கு சரியான அங்கீகாரம் கிடைக்காமல் மரித்துப்போனவர்கள்.

இன்றும்...அனுதினமும்,, காலை வழிபாட்டின் போது இந்த இரண்டு ஜீவன்களையும் நினைக்காமல் என் நாட்கள் தொடங்குவது இல்லை.

இந்த இருவரைப் பற்றித்தான் நான் நிறைய எழுத வேண்டும். மறக்கப்பட்ட இவர்களின் சரித்திரத்தை.....அந்த வியர்வை துளிகளின் கனத்தை...என் வலைத்தலமாவது வாங்கிக்கொள்ளும் என்ற எதிர்பார்ப்பில் இதனை எழுத தொடங்குகிறேன்.....

1 comment:

  1. Mama, This is one of the wonderful blog post I ever came across. I thought you left the blog without updating it, you just made tracks of tears to role down my cheeks.

    I miss them too mama, ammayaya kooda inum neraya neram selavalichirukanum.. :( she is the most hard working person, may be on this planet :(

    ReplyDelete